திருநங்கைகளுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டும், சிலர் படுகாயம் அடைந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.

காஞ்சிபுரம் வளத்தோட்டம் பகுதியில் திருநங்கைகளுக்கான குடியிருப்பு அமைந்துள்ளது. அந்த குடியிருப்பு பகுதியில் வாழும் திருநங்கைகள், இரண்டு குழக்களாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒரு தரப்பினர் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட சுய தொழில் செய்து வருகின்றனர். மற்ற தரப்பினரோ பாலியல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இருவேறு துருவங்களாக இவர்களின் செயல்பாடு இருந்து வரும் நிலையில் இவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது. பாலியல் செயல்களில் ஈடுபட்டு வரும் திருநங்கைகளுக்கு ஆதரவாக சில ரவுடிகள் ஆதரவு இருப்பதும் தெரிகிறது., மேலும், இவர்கள் சுயதொழில் செய்து வரும் திருநங்கைகள் மீதும் அவர்கள் வீடுகள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதாகவும் போலீசில் புகார் கூறப்பட்டு வந்தது.

இந்த புகாரை அடுத்து, திருநங்கைகள் குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தினர். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது, மற்றொரு தரப்பு திருநங்கைகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் நடந்த சண்டையில் திருநங்கை ஒருவருக்கு தலை மற்றும் முகத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. சிலர் படுகாயம் அடைந்தனர். 

திருநங்கைகள் மோதல் குறித்து கேள்விபட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், மோதலுக்கு காரணமான இரு தரப்பை சேர்ந்த 17 பேர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.