ஆளில்லா ரயில் பாதையை கடக்க முயன்ற லாாி மீது ரயில் மோதி விபத்து!

புதுக்கோட்டை அருகே ஆளில்லா ரயில்வே பாதையை கடக்க முயன்றபோது ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் லாரி உருக்குலைந்து போனது.

புதுக்கோட்டை அருகேயுள்ள வடசேரிபட்டி அருகே வைக்கோல் ஏற்றிக் கொண்டு வந்த லாாி ஒன்று, ஆளில்லா ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளது.  தண்டவாளத்திலேயே லாரி நின்று விட்டது.

அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கிச் வந்த ராமேஸ்வரம் எஸ்க்பிரஸ் ரயில் வருவதைக் கண்ட லாரி ஓட்டுநா் இளங்கோ, தப்பி ஓடி உயிர் பிழைத்துக் கொண்டார்.

அதிவேகத்தில் வந்த ரயிலானது லாரியின் மீது மோதி 300 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்களும், போலீசாரும், ஒருமணி நேரம் போராடி பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். 

இதனால் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. இதேபோல் பல்லவன் மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாமதமாகச் சென்றன. விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.