Traffic workers with family to fight tomorrow
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்து வரும் நிலையில், நாளை நடைபெறும் போராட்டத்தில் தங்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தை 2.57 மடங்கு உயர்த்த வேண்டும், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள், பணியாளர்கள், முதியவர்கள் என பல
தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து கிடைக்காததால் பள்ளிக்கு குறித்த நேரம் செல்ல மாணவர்களால் முடியவில்லை.
வேலை நிறுத்த போராட்டத்தை முடித்து கொண்டு பணிக்கு திரும்புமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என கூறி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என வழக்கறிஞர் வாராஹி என்பவர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டார். தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டுத்தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், 5000 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்றும், இது திடீர் போராட்டமோ, தொடர் போராட்டமோ கிடையாது என்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உங்களது போராட்டத்தால் பாதிப்பு யாருக்கு என்பதை உணர்ந்துள்ளீர்களா என்று தொழிற்சங்கத்திடம் கேள்வி எழுப்பினார். மேலும் போக்குவரத்து துறையை நடத்த முடியவில்லை என்றால் தனியார் மயமாக்குங்கள் என்றும் தலைமை நீதிபதி கூறியிருந்தார்.
இந்த நிலையில் போக்குவரத்து சங்கங்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாளை நடைபெறும் போராட்டத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பணிமனைகள் முன்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர். இந்த அறிவிப்பை 22 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நிதி மற்றும் போக்குவரத்து துறை செயலாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
