அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் நாளை விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வைத்திலிங்கம் மூலம் டெல்டாவை தட்டித்தூக்க விஜய் ரெடியாக உள்ளார்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய செங்கோட்டையனின் வருகை விஜய்க்கும், தவெக தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. மேலும் கொங்கு மண்ணில் திமுகவின் செந்தில் பாலாஜிக்கு நிகராக செங்கோட்டையனுக்கு ஆதரவு இருப்பதால் செங்கோட்டையனை வைத்து கொங்கு பகுதி வாக்குகளை அள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.

தவெகவில் இணையும் வைத்திலிங்கம்

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் அணியில் இணைந்த வைத்திலிங்கம் நாளை (டிசம்பர் 10) தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பே வைத்திலிங்கம் தவெகவில் இணையப்போவதாக பேச்சு அடிபட்ட நிலையில், அதை அவர் மறுத்திருந்தார். ஆனால் நாளை வைத்திலிங்கம் நடிகர் விஜய்யின் தவெகவில் இணைய இருப்பதாக உறுதியான தகவல் கூறுகின்றன.

டெல்டா பகுதியில் செல்வாக்கு

டெல்டா பகுதியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர் வைத்திலிங்கம். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இவர் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். ஆனால் ஓபிஎஸ் பக்கம் சென்றும் வைத்திலிங்கத்துக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ஓபிஎஸ் அதிமுக ஒன்றிணைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய கட்சியும் தொடங்கவில்லை.

செங்கோட்டையன் பிளான்

இதனால் ஓபிஎஸ் உடன் இனியும் இருப்பது சரிவராது என்பதை தெரிந்து கொண்ட வைத்திலிங்கம் தவெகவில் இணைய முடிவெடுத்தார். டெல்டாவில் செல்வாக்குமிக்க தலைவர் என்பதால் திமுக இவருக்கு வலைவிரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் செங்கோட்டையன் தான் திமுக வலையில் சிக்காத மாதிரி வைத்திலிங்கத்தையும் தவெக பக்கம் கொண்டு சென்றுள்ளார்.

டெல்டாவை தட்டித் தூக்க விஜய் ரெடி

தவெக புதிய கட்சி என்பதால் அங்கு அரசியல் அனுபவம் யாரும் கிடையாது. ஆனால் செங்கோட்டையன் தவெகவுக்கு லட்டுபோல் வந்து சேர்ந்தார். செங்கோட்டையனால் கட்சிக்கு அனுபவம் கிடைப்பது மட்டுமின்றி கொங்கு பெல்ட்டிலும் தவெக பலம் பெறும். இதேபோல் வைத்திலிங்கமும் தவெகவில் சேர்ந்தால் அக்கட்சி கூடுதல் பலம் பெறும். மேலும் டெல்டாவில் பெரும் பலமாக இருக்கும் திமுகவுக்கு டப் கொடுக்க சரியான ஒரு நபர் விஜய்க்கு கிடைத்த மாதிரியும் இருக்கும். இதனால் கொங்குவில் செங்கோட்டையன், டெல்டாவில் வைத்திலிங்கம் என வாக்குகளை அறுவடை செய்ய பக்கா ஸ்கெட்ச் போட்டு விஜய் ரெடியாக உள்ளார்.