ஜி.கே.மணி மனிதனே இல்லை என்றும் அவர் ஏதேதோ சொல்லி தன்னையும், ராமதாஸையும் பிரித்து விட்டதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் தரப்புக்கும், அன்புமணி தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் வலுத்து வருகிறது. அதுவும் தேர்தல் ஆணையம் அன்புமணி தான் தலைவர் என்று கூறிய பிறகு இரு தரப்புக்கும் வார்த்தை மோதல் அதிகரித்து வருகிறது. 'அன்புமணி தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி மோசடி செய்து விட்டார். அவரை சிறையில் தள்ள வேண்டும்' என்று பாமக எம்.எல்.ஏ அருள் தெரிவித்தார்.
அன்புமணி ஜனநாயக படுகொலை
இதேபோல் ராமதாஸ் பக்கம் இருக்கும் பாமக மூத்த தலைவர் ஜி.கே.மணியும் அன்புமணியை கடுமையாக விளாசினார். ''அன்புமணியும், தேர்தல் ஆணையமும் ஜனநாயக படுகொலை செய்துள்ளன. அன்புமணி தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு போலி ஆவணங்கள் கொடுத்து 2026ம் ஆண்டு வரை பதவியில் இருப்பேன் என கூறி வருகிறார். நீதிமன்ற உத்தரவின் மூலம் பாமகவுக்கு தான் தலைவர் என அன்புமணி இனி கூற முடியாது. மாம்பழ சின்னமும் அவர்களுக்கு கிடையாது'' என்று ஜி.கே.மணி தெரிவித்து இருந்தார்.
25 ஆண்டுகள் தலைவர் பதவி போதாதா?
இந்த நிலையில், தனக்கும், அப்பாவுக்கும் இடையே ஏதோ சொல்லி ஜி.கே.மணி இடைவெளியை ஏற்படுத்தி விட்டதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பாமக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், ''25 ஆண்டுகளாக உங்களை தலைவராக்கி அழகு பார்த்துள்ளோம். 8 முறை எம்.பி, எம்.எல்.ஏ தேர்தலில் நிற்க வைத்து 4 முறை எம்.எல்.ஏ ஆக்கியுள்ளோம். இது போதாதா? இப்போது பதவி இல்லாமல் இருக்க முடியவில்லை.
இவர்கள் மனுசனே இல்லை
ஆகையால் என்னை ஐயா தலைவர் ஆக்கியவுடன் உடனே சூழ்ச்சியை அவர் (ஜி.கே.மணி) ஆரம்பித்து விட்டார். என்னென்னமோ சொல்லி அப்பாவுக்கும், மகனுக்கும் இடைவெளிய உருவாக்கி விட்டார்கள். இவர்களெல்லாம் சாதாரணமான ஆட்களே இல்லை. இந்த சமூகத்தால் ஒதுக்கப்பட வேண்டியவர்கள். ஏன் மனிதர்களாக இருக்க கூட தகுதியற்றவர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
சிறைக்கு செல்வார்கள்
மேலும் பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு திமுக தான் காரணம் என்று குற்றம்சாட்டிய அன்புமணி, ராமதாஸை துரோகிகளும், திமுகவின் கைக்கூலிகளும் சுற்றி வளைத்து இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த துரோகிகளை தான் ஒருபோதும் மன்னிக்கப்போவது இல்லை என்றும் அவர்கள் சிறைக்கு செல்வார்கள் எனவும் அன்புமணி ஆவேசமாக கூறியுள்ளார்.


