இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில், அதிக சுமை ஏற்றிவந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ஒருபக்கமாக கவிழ்ந்ததில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பெருநாழி அருகே தென்சலையாள்புரத்தைச் சேர்ந்தவர் பொன்னுச் செட்டியார் மகன் கருப்பசாமி (39). 

இவர் தனது டிராக்டரில் கரிமூட்டத் தொழிலுக்காக அளவுக்கு அதிகமான கருவேல மர விறகுகளை ஏற்றி வந்துள்ளார். 

கருப்பசாமி, டி.எம்.கோட்டை வளைவு சாலையில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் ஒருபக்கமாய் கவிழ ஆரம்பித்தது. அப்போது, கருப்பசாமி தன் உயிரைக் காப்பற்றிக் கொள்ள டிராக்டரில் இருந்து குதிக்க முயன்றார். ஆனால், அதற்குள் டிராக்டர் அவர் மீது மொத்தமாக கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்தார். 

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு கமுதி அரசு மருத்துமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். 

பின்னர், அவரது உடலை உடற்கூராய்வுக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து கருப்பசாமி மனைவி முத்துலெட்சுமி பெருநாழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் பெருநாழி காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர்.