தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.  

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் வழியாக காவிரி ஆறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் வருகிறது. ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி அருவி, பிரதான அருவி ஆகியவை உள்ளன. 

இங்கு தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வார்கள். ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் முதலைப் பண்ணை, சிறுவர் பூங்காவுக்கு சென்று இரசிப்பர். 

மீன் கடைகளில் விற்பனையாகும் மீன்களை வாங்கி சாப்பிடுவதுண்டு. இதனால் சீசன் காலங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.

ஒகேனக்கல் அருகே பிலிகுண்டுலு என்ற இடத்தில் காவிரி தண்ணீர் வரத்து கண்காணிக்கப்படுகிறது. மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் நீர்வரத்தை அளவிடுகிறார்கள். 

கடந்த ஒரு ஆண்டாக காவிரியில் நீர்வரத்து குறைவாகவே இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் வினாடிக்கு 1000 கன அடி முதல் 1200 கன அடி வரை தண்ணீர் வந்தது. அதன்பின்னர், நீர்வரத்து மேலும் குறைந்தது. 

கடந்த மாதம் முதல் வினாடிக்கு 150 கன அடி முதல் 200 கன அடி வரை தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. நேற்று முன்தினமும் குறைவான அளவு தண்ணீரே வந்ததால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. 

இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணியளவில் 1000 கன அடி தண்ணீர் வந்தது. பிற்பகலில் 1200 கன அடியாக அதிகரித்தது. பிரதான அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.