Kutralam : குற்றால அருவியில் கொட்டும் தண்ணீர்.!! சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் - மாவட்ட நிர்வாகம் அதிரடி
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர்
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். தற்போது வெயிலின் தாக்கம் குறந்துள்ள நிலையில் பருவமழையானது தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
சாரல் மழையோடு அருவிகளில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். ஆனால் ஒரு சில நேரங்களில் மலைப்பகுதிகளில் அதிகளவு மழை பெய்வதால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. திடீர் வெள்ளத்தால் பொதுமக்கள் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயத்தை எச்சரிக்கை செய்யும் வகையில் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகளுக்கு தடை
இந்தநிலையில ்கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் அருவிகளில் சரியான அளவு தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இந்தநிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை முதல் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தண்ணீருடன் மரக்கிளைகள் கற்கள் இழுத்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். ஐந்தருவி மெயின் அருவி பழைய குற்றாலம் புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.