Tomorrow anuman Jayanti Festival 60 thousand lads are ready to deliver to the participants
ஈரோடு
ஈரோட்டில், நாளை நடைபெறவுள்ள அனுமன் ஜெயந்தி விழாவில் பங்கேற்கும் அடியார்களுக்கு வழங்க 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு மாவட்டம், வ.உ.சி பூங்காவில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் வார வழிபாட்டுக்குழு சார்பில் கடந்த 30 வருடங்களாக அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்தவருடம் அனுமன் ஜெயந்தி நாளை நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வழிபாட்டுக் குழுவினர் செய்து வருகின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்கும் அடியார்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக சுமார் 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி கடந்த மூன்று நாள்களாக ஈரோடு, கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பணியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வழிபாட்டுக் குழு நிர்வாகிகள் சிற்றரசு, குமார் ஆகியோர் கூறியது: "அனுமன் ஜெயந்தி விழா நாளை அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஓமத்துடன் தொடங்குகிறது. வார வழிபாட்டுக் குழு சார்பில் அடியார்களுடன் லட்டு, ஆரஞ்சு நிற கயிறு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அடியார்களுக்கு வழங்குவதற்காக 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு தனித்தனி பாக்கெட்டில் போடப்படுகிறது. இதற்காக 1250 கிலோ கடலை மாவு, 1600 கிலோ சர்க்கரை, 750 லிட்டர் எண்ணெய், 60 கிலோ முந்திரி, 50 கிலோ உலர்ந்த திராட்சை ஆகிய பொருள்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது" என்று அவர்கள் தெரிவித்தனர்.
