கிழக்கு திசை காற்றில்  ஏற்பட்ட வேகம் காரணமாக  தமிழகத்தின்  உள் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத.

பொதுவாக மார்ச் மாதத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவது கடினம். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரபிக் கடல் பகுதியில் கன்னியாகுமரி அருகே உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது.

இதன் காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 13-ந்தேதி பலத்த மழை பெய்தது. அதன்பிறகு காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலு குறைந்தது. இருப்பினும் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் அரபிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுஇழந்து அங்கேயே மறைந்துவிட்டது. ஆனால் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்ட வேகம் மற்றும் வேறுபாடு தென் இந்தியாவில் உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என்றும், குறிப்பாக கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கோவை ஆகிய உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே போன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும்,  சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நெல்லை மாவட்டம் தென்காசி,  திருபுவனம், பாபநாசம்  உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.