கோயம்புத்தூர் 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு நடை பெறுவதையொட்டி அசம்பாவிதங்களை தடுக்க 3000 காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடைபெறும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. 

இதற்கு பல்வேறு வர்த்தக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். ஆனால், எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள முழு அடைப்பை எதிர்நோக்கும் வகையில் காவல் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பலத்த காவல் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவலாளர்கள் செய்து வருகின்றனர். மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்தரவின் கோவை நகரில் 2000-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

நகரின் முக்கியப் பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் பாதுகாப்பு போடப்படுகிறது. கோவை இரயில் நிலையத்தில் காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அங்கு வரும் பயணி களின் உடமைகளை தீவிர சோதனை செய்தபின்னரே அவர்களை உள்ளே அனுமதித்தனர்.

இதேபோல கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி உத்தரவின்பேரில் சூலூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

கோயம்புத்தூர் நகரம் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மொத்தம் 3000 காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். காவல் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடைகளை அடைக்கச் சொல்லி யாரையும் வற்புறுத்தக்கூடாது. அவ்வாறு வற்புறுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் வழக்கம்போல செயல்படும் என்று தெரிகிறது.