விழுப்புரம்

கமல்ஹாசன் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் காட்டமாகத் தெரிவித்தார்.

விழுப்புரத்தில், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அடுத்த மாதம் 9–ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள இருக்கிறார்.

இதற்காக விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே மேடை அமைக்கும் பணி நடைப்பெறும். அதன் முதற்கட்டமாக அங்கு நேற்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. கட்சியோடு ரகசிய உறவு வைத்துக் கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முயன்றார். அதற்காகத்தான் கட்சித் தலைமை மூலம் முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இன்னும் அவர் தி.மு.க.வுடன் தொடர்பு வைத்திருப்பது, அவர் நடத்தும் நாடகங்களை பார்த்து கொண்டிருக்கும் மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றிப் பேச ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகுதி கிடையாது.

நாங்கள் எப்போதும் எங்கள் அணியில் உள்ளவர்களின் ஒட்டுமொத்த கருத்துகளின் அடிப்படையில் தான் முடிவு செய்வோம்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் கமல்ஹாசன், தமிழ் கலாசாரத்துக்கும், இந்திய கலாசாரத்துக்கும் விரோதமாக செயல்படுகிறார். பெண்களைப் பற்றி பேசவும், இந்த நாட்டு மக்களை பற்றி பேசவும் அவருக்கு தகுதி கிடையாது.

பணத்திற்காகவும், தனது ஆதாயத்துக்காகவும் பிக் பாஸ் என்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மக்களை விமர்சிக்கிற வகையிலும், தரம் தாழ்த்துகிற வகையிலும் பெண்களை இழிவாக காட்டுகிறார்.

இந்த செயலை புரியும் நடிகர் கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.