சிவகாசியில் விபத்தில் காயமடைந்து உயிரிழந்த பெண்ணின் இறுதி சடங்கிற்கு பணம் வழங்கக் கோரி அப்பெண்ணின் வீட்டருகில் வசித்தவர்கள் சடலத்தை வாங்க மறுத்தனர்.

சிவகாசி சாட்சியாபுரம் ஆசாரி காலனியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி மகேஸ்வரி (46). பாலகிருஷ்ணன் இறந்துவிட்ட நிலையில் மகேஸ்வரி கூலி வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த மாதம் 27-ஆம் தேதி சிவகாசி பேருந்துநிலையம் அருகே நடந்து சென்றபோது, தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி புதன்கிழமை உயிரிழந்தார்.

இறந்த மகேஸ்வரிக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், மகேஸ்வரி வீட்டின் அருகில் வசித்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கையெழுத்து போடுமாறு கோரினர்.

இதையடுத்து மகேஸ்வரியின் இறுதிச் சடங்கிற்கான பணத்தை, அவர்மீது மோதிய பேருந்து உரிமையாளர் வழங்க வேண்டும். பணம் வழங்கிய பின்னர்தான் கையெழுத்திடுவோம் எனக் கூறினர். 

பின்னர், காவல்துறையினர் பேருந்து உரிமையாளரிடம் பேசி இறுதி சடங்கிற்கு ரூ.7,000 பெற்றுத் தந்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.