தமிழகத்தில் 38 மாவட்டங்கள் மற்றும் கூடுதலாக 6 தாலுகாக்கள் என 44 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது. தலைநகர் சென்னையில் 170 இடங்களில் நடைபெறும் இந்த தேர்வை சுமார் 41,094 தேர்வர்கள் எழுதுகின்றனர்.
TNPSC Group 1 Exam: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத் துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளில் 70 காலிப்பணியிடங்கள் உள்ளது. அதிகபட்சமாக துணை ஆட்சியர் பணியிடத்துக்கு 28, துணை காவல் கண்காணிப்பாளர் 7, உதவி ஆணையர் 19, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் 7, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 3, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் 6 உள்ளிட்ட காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டது.
குரூப்-1 தேர்வு
இந்த குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றது. இந்த பதவிகளுக்கு 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேர், குரூப்-1 ஏ பதவிக்கு 6 ஆயிரத்து 465 பேர், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ பதவிக்கு 14 ஆயிரத்து 849 பேர் என மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
38 மாவட்டங்களில் 44 இடங்களில் தேர்வு
தமிழகத்தில் 38 மாவட்டங்கள் மற்றும் கூடுதலாக 6 தாலுகாக்கள் என 44 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது. தலைநகர் சென்னையில் 170 இடங்களில் நடைபெறும் இந்த தேர்வை சுமார் 41,094 தேர்வர்கள் எழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்களாக 987 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்
முன்னதாக தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள்ளாகவே தேர்வு அறைக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு அறைக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதியம் 12.30 முன்பு தேர்வர்கள் தேர்வு கூடத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டர்கள். தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதி சீட்டுடன் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒன்றின் அசல் அல்லது ஒளி நகலை தேர்வர்கள் கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன், மின்னணு கடிகாரம், புளூடூத் போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளது.
