12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாதவர்களுக்கு ஜூன் மாதமே மறு வாய்ப்பு - அமைச்சர் அறிவிப்பு
நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாதவர்களுக்கும், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் ஜூன் மாதமே மறு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான 12, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வானது தொடங்கி நடைபெற்றுக் கொண்ட இருக்கிறது. இதில் 12ம் வகுப்பு தமிழ் தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு தேர்வு எழுதாமல் இருந்தனர். விழுக்காட்டின் அடிப்படையில் இது 5 விழுக்காடுக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஒவ்வொரு கல்வியாண்டும் சராசரியாக பொதுத் தேர்வில் 4.5 முதல் 4.6 விழுக்காடு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுதாத நிலை இருந்து வருகிறது. ஆனால் தற்போது இது 5 விழுக்காடுக்கும் அதிகமாக சென்றுள்ளது. மேலும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொண்டால் தேர்ச்சி விகிதம் மேலும் சரியும்.
நெஞ்சுவலியால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ்..! உடல் நிலை எப்படி உள்ளது.? மருத்துவமனை தகவல்
எனவே நடப்பு கல்வியாண்டில் தேர்வு எழுதுவதைத் தவற விட்டவர்கள், தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் என இரு தரப்பினரையும் ஊக்கப்படுத்தி அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்ற ஜூன் மாதமே மறு தேர்வு நடத்தி அதில் அவர்களை பங்கேற்க வைக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து மாணவர்களின் மத்தியில் தேர்வு குறித்த அச்சத்தை போக்கும் விதமாக அரசு சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொண்ட நிலையிலும் தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை வருத்தம் அளிக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக நாள் தோறும் முதல்வர் தாமாக தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.