Asianet News TamilAsianet News Tamil

வருமான வரித்துறை சோதனை எதிரொலி: அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை உத்தரவு!

அனைத்து சார்பதிவாளர்களும் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது

TN registration department order all the registrars have to upload the details on the website of Income Tax Department
Author
First Published Jul 6, 2023, 11:31 AM IST

திருச்சி உறையூர், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்  பதிவுத்துறை அலுவலகங்களில் நேற்று முன் தினம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது, ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, பல கோடி ரூபாய்க்கு பத்திரப் பதிவு நடைபெற்ற நிலையில், அவை வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், அனைத்து சார்பதிவாளர்களும் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வருமான வரி சட்டம் பிரிவு 285 பி.ஏ. மற்றும் விதி 114 இ-ன்படி ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவடைந்ததும் ரூ.30 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்களை பொறுத்து விற்பவர், வாங்குபவர் ஆதார் எண், பான் எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற விவரங்கள் பதிவு அலுவலர்களால் வருமான வரித்துறை இணையதளத்தில் அப்லோடு செய்யப்படுகிறது. இது படிவம் 61ஏ என அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த விவரங்கள் தவறாமல் அப்லோடு செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை மூலம் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிதியாண்டு முடிவடைந்த 2 மாதத்துக்குள் எந்தெந்த சார்பதிவாளர்கள் இந்த அறிக்கையை அப்லோடு செய்தார்கள் என்ற விவரத்தை பதிவுத்துறை தலைவருக்கு தெரிவிக்கும் நடைமுறை வருமான வரித்துறையால் பின்பற்றப்படாதநிலையில் அப்லோடு செய்யப்படாத விவரங்கள் குறித்து அவ்வப்போது வருமான வரித்துறையால் நினைவூட்டுகள் பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பப்படுவதும் அதன்மீது பதிவுத்துறை தலைவர் உரிய மேல் நடவடிக்கை எடுப்பதும் வழக்கத்தில் உள்ளது. 

வருடாந்திர அறிக்கை மட்டுமல்லாது ரூ.30 லட்சத்துக்கு மேல் மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்கள், ரூ.10 லட்சத்துக்கு மேல் மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்கள் போன்றவற்றின் விவரங்களும் வருமான வரித்துறையினரால் பதிவுத்துறை தலைவரிடம் அவ்வப்போது கோரப்படும்.

இந்த விவரங்கள் மையக்கணினியில் இருந்து எடுக்கப்பட்டு வழங்கப்படும். இதன்மூலம் சார்பதிவாளர் அப்லோடு செய்த படிவம் 61 ஏ-வில் ஏதேனும் விடுதல்கள் உள்ளதா? என்ற விவரம் வருமான வரித்துறையால் சரிபார்க்கப்படும். இவ்வாறு அப்லோடு செய்ய தேவையான தகவல்களை ஆவணம் பதிவு செய்ய முன்பதிவு செய்யும் முன்பே ஆவணதாரர்களிடம் இருந்து பெறும் வகையில் பதிவுத்துறையின் ஸ்டார் 2.0 மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனை ஆவணங்கள் பதிவுக்கு வரும் நிலையில் விற்பவர் மற்றும் வாங்குபவரிடம் இருந்து பான் எண் பெறப்படுகிறது.

இளைஞரணி நிர்வாகிகள் நியமனம்: உதயநிதிக்கு எதிராக சீறிய திமுக எம்.பி.,!

பான் எண் இல்லாதவர்கள் வருமான வரி சட்டத்தின்படி படிவம் 60 அளிக்க வேண்டும். இந்த விவரமும் மென்பொருள் வழியே சேகரிக்கப்படுகிறது. மேலும் ரூ.30 லட்சதுக்கு மேற்பட்ட விற்பனை ஆவணங்களை பொறுத்து விற்பவர், வாங்குபவர் ஆதார் எண், பான் எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற கூடுதல் விவரங்கள் ஸ்டார் 2.0 மென்பொருள் வழி சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்கள் அந்த நிதியாண்டு முடிவடைந்ததும் வருமான வரித்துறை இணையதளத்தில் சார்பதிவாளரால் அப்லோடு செய்யப்படுகிறது.

மேலும் பதிவு பணிகள் மேற்கொள்ளும்போது விற்பனை செய்பவர் மற்றும் சொத்தினை வாங்குபவர்களின் ஆதார் எண் பெறப்பட்டு, அதனை நிகழ்நேரத்தில் ஆதார் தரவுடன் 2.0 மென்பொருள் மூலமாக சரிபார்க்கப்படுகிறது. ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதால் பதிவு தொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு வழங்கும் வகையில் பதிவுத்துறை மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உறையூர் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கு 4ஆம் தேதி வருமான வரித்துறையினர் நேரில் வந்தனர். 2017-18-ம் நிதி ஆண்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள், அவர்களால் கோரப்பட்டதற்கு இணங்க வழங்கப்பட்டன. தேவையான தகவல்களை நேரில் சரிபார்க்கவும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. இந்த இரு அலுவலகங்கள் குறித்தும் கூடுதல் விவரங்கள் வருமான வரித்துறையினரால் அந்தந்த சார்பதிவாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் விரைவில் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும். மேலும் உரிய காலத்துக்குள் இந்த விவரங்களை அப்லோடு செய்யாத இந்த 2 அலுவலகங்களின் சார்பதிவாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சார்பதிவாளர்களும் 61 ஏ விவரங்களை வருமான வரித்துறையின் இணையளத்தில் உரிய காலத்துக்குள் அப்லோடு செய்யவேண்டும் என கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios