அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது
மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனால், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்துள்ளனர். அதன்படி, சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
இதனிடையே, செந்தில் பாலாஜியை கைது செய்துள்ள அமலாக்கத்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும். ஆனால், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால், இதுதொடர்பான முறையீட்டின்படி, சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருக்கும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரடியாக வந்தார். அமைச்சரது உடல்நலம் குறித்து அறிந்து கொள்வதற்காகவே வந்ததாக அப்போது அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, மருத்துவமனையில் விசாரணை நடத்திய நீதிபதி அல்லி, வருகிற 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க அமலாக்கத்துறை சார்பில் நீதிபதி அல்லியிடம் வலியுறுத்தினர். அமைச்சருக்கான அறுவை சிகிச்சையின் அவசியம் குறித்து திமுக வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து விசாரிக்கவே மருத்துவமனைக்கு வந்ததாக தெரிவித்த நீதிபதி, வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துக்கொள்ள இரு தரப்புக்கும் அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி வழக்கறிஞர்கள் நீதிபதி அல்லியிடம் மனுதாக்கல் செய்தனர். அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
