நாளை நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு துணை ராணுவம் தேவையில்லை என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் நடந்துமுடிந்துவிட்ட நிலையில், தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,''கோவையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சென்னை மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து கோவைக்கு ரவுடிகள் வந்துள்ளனர். இந்த ரவுடிகளால் தேர்தலின் போது பிரச்சனை ஏற்படலாம். திமுக என்ன சொல்கின்றதோ, அதை மட்டும்தான் காவல்துறை செய்கிறது. போலீஸ் துணையுடன் பணப்பட்டுவாடா நடக்கிறது.
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே ரவுடிகளுடன் கைகோர்த்து விட்டனர். கோவையில் இது தொடர்ந்து நடந்து வருகிறது. இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. திமுகவுக்கு துணையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும். மக்கள் பயமின்றி வாக்களிக்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் துணை இராணுவ படையினர் வரவழைக்கப்பட வேண்டும்'' என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரி கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை முன்னாள் அமைச்ச்ர் எஸ்.பி.வேலுமணி தர்ணாவில் ஈடுபட்டார்.
இந்நிலையில், ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், கோவையில் உள்ள வெளியூர்களைச் சேர்ந்த திமுகவினரை வெளியேற்றப்பட வேண்டும். போலீஸார் மைக் மூலமாக உத்தரவிட வேண்டும் என்று கோரி போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே 4 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 40-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ''உள்ளாட்சித் தேர்தலுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நாளைய தேர்தலுக்கு துணை ராணுவம் தேவையில்லை'' என தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
