கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வழக்கறிஞர்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!
கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர் பாஜகவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக நேற்று பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஓராண்டாக சிறையில் இருந்த தன்னை விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால், ஆத்திரத்தில் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பாஜகவினர் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன், பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை நீர்த்துப் போக செய்ய காவல்துறை முயற்சிப்பதாக ஆளுநர் மாளிகையும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில், கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர் பாஜகவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது.
சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர்; முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!
இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜகவில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்தான் இந்த கருக்கா வினோத். அந்த வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த அவர், கடந்த வாரம்தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, சிறையில் இருந்து வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் தற்போது ஆளுநர் மாளிகை மீது மீண்டும் பெட்ரோல் குண்டு வீசி கைதாகியுள்ளார்.
இதனிடையே, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசி கைதாகி உள்ள கருக்கா வினோத்தை, இதற்கு முந்தைய வழக்கில் (பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு) இருந்து ஜாமீனில் எடுத்தது திருவாரூர் மாவட்ட பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வகுமார் என திமுக சந்தேகம் தெரிவித்துள்ளது.