மகளிருக்கான விடியல் பயணத்தை மலைப் பகுதிகளில் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் கொண்டு வந்த திட்டங்களில் முக்கியமானது மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் உயர் கல்வி பயிலும் மாணவியர், பணிபுரியும் மகளிர், திருநங்கைகள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்து வருகின்றனர்.

மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்துக்கு ‘விடியல் பயணம்’ என முதல்வர் ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையின்போது பெயர் சூட்டினார். இந்த நிலையில், மகளிருக்கான விடியல் பயணத்தை மலைப் பகுதிகளில் உள்ள பெண்களுக்கும் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்ய போக்குவரத்து துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், விடியல் பயணத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதனை மலைப் பகுதியில் உள்ள மகளிர் அனைவரும் பயன் அடையுமாறு விரிவுபடுத்த ஆய்வு செய்யுமாறு போக்குவரத்துத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை கடந்துள்ளது. புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவதையும், பழைய பேருந்துகளை புதுப்பித்து இயக்கும் பணியினையும் விரைவுப்படுத்திட வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, பணிக்கு வராத பணியாளர்களை, பொதுமக்களின் நலன் கருதி, பணிக்கு தவறாமல் வருகை புரிந்து பேருந்துகளை இயக்கிட ஏதுவாக, அவர்களுடன் கலந்துரையாடுமாறு கேட்டுக் கொண்ட அமைச்சர் சிவசங்கர், எரிபொருள் செயல்திறன், பேருந்துகள் பயன்பாடு, இருக்கைகள் நிரப்பும் விகிதம், கிலோ மீட்டர் செயல்பாடு, நிதி நிலை செயல்பாடு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட ஏதுவாக பணியாளர் நியமனத்திற்காக இணையதளம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறையின் நிலையையும், கருணை அடிப்படையிலான பணி நியமன எண்ணிக்கையை அதிகரிக்க உள்ள சாத்தியக் கூறுகளையும் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அளிக்கப்படும் கோரிக்கைகளின் நிறைவேற்றுதலையும் அவர் ஆய்வு செய்தார்.

இந்தியா நடத்தும் ‘குளோபல் இந்தியா செயற்கை நுண்ணறிவு 2023’ மாநாடு!

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கூடுதல் வருவாய்க்காக அமைக்கப்பட்டு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனையகங்கள், மின்சாரச் செலவை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் சூரிய மின் தகடுகள் நிறுவுதலின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அதனை விரைவுபடுத்துமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்டு வரும் CCTV கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதையும், கைரேகை தொழில்நுட்ப வருகைப் பதிவேட்டையும் துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். 2023-ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்புகளின் அமலாக்க முன்னேற்றத்தினையும் அவர் ஆய்வு செய்தார். மேலும், போக்குவரத்துக் கழகங்கள் வாரியாக உயிரிழப்பு விபத்துக்களின் எண்ணிக்கையை ஆராய்ந்து, அதனை வெகுவாக குறைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, தொலைதூரப் பேருந்து பயணிகள் அனைவரும் இருக்கையை உறுதி செய்து பயணித்திட ஏதுவாக, பேருந்து பயணச் சீட்டு முன்பதிவு வசதியை தேர்ந்தெடுக்க பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் கேட்டுக் கொண்டார். பயணிகள் உதவி எண்ணின் மூலம் பெறப்படும் பொதுமக்களின் குறைபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, அதனை உடனடியாக நிவர்த்தி செய்திட வேண்டும். மழைக் காலம் தொடங்கி விட்டதால் மக்கள் எந்தவித இடர்பாடும் இன்றி பேருந்துகளில் பயணிக்க ஏதுவாக, பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.