தமிழகத்தில் உள்ள ஊர்கள், தெருக்கள், மற்றும் பொது இடங்களில் உள்ள சாதிப் பெயர்களை உடனடியாக நீக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சமூக சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டும் நோக்கில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஊர்கள், தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் சாதி பெயர்களை நீக்கிவிட்டு, புதிய பெயர்களைச் சூட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.

சாதிப் பெயர்கள் நீக்கம்

ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிப் பெயர்களைக் கொண்டுள்ள ஊர் மற்றும் குடியிருப்புப் பெயர்களை நீக்க வேண்டும்.

காலனி போன்ற வார்த்தைகள் வசைச்சொற்களாக பயன்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய சொற்களையும் அரசு ஆவணங்களில் பயன்படுத்த வேண்டாம் என்று அரசு அறிவுறத்தியுள்ளது.

அதேபோல, சக்கிலியர் சாலை, பறையர் சாலை போன்ற பெயர்களையும் நீக்க அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

தலைவர்கள், மலர்கள் பெயரைச் சூட்டலாம்

சாதிப் பெயர்களை நீக்கிய பின்னர், புதிய பெயர்களை வைப்பதற்கான ஆக்கபூர்வமான பரிந்துரைகளையும் அரசு வழங்கியுள்ளது.

புதிய பெயர்களாக, திருவள்ளுவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற தமிழக ஆளுமைகளின் பெயர்களை வைக்கலாம். ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு ரோஜா, மல்லி, முல்லை போன்ற பூக்களின் பெயர்களைச் சூட்டலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 19 வரை காலக்கெடு:

சாதிப் பெயர்களை நீக்குதல் மற்றும் புதிய பெயர்களைச் சூட்டுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் நவம்பர் 19-ஆம் தேதிக்குள் முடித்து, இது குறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்களுக்குக் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது. சமூக சமத்துவத்தை நோக்கிய இந்தப் புரட்சிகரமான நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.