பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 18 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழில்பூங்காவில் அமைந்துள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் பாக்ஸ்கான் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியில் உணவின் தரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை சரிசெய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக பூந்தமல்லி அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இரவு உணவு உட்கொண்ட சுமார் 100 மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்க்கப்பட்டனர். இதில் 2 பெண்கள் உயிரிழந்து விட்டதாக வதந்தி பரவியதையடுத்து, பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். விடிய விடிய நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர் கலந்துக்கொண்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி.கணேசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கையை அரசு பரிசீலித்து ஆவன செய்யும் என தெரிவித்தையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதனையடுத்து கடந்த 23 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில், தொழில்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் தலைமையில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையில் தமிழக அரசு சார்பில் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களின் சூழ்நிலைகளை மேம்படுத்தித்தர வேண்டும். தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்தித்தர வேண்டும். தேவையான இடவசதி, குளியல் அறை, கழிவறை, குடிதண்ணீர், காற்றோட்டமான அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித்தர வேண்டும் என்று எடுத்துரைக்கபட்டுள்ளது.
மேலும் தொழிலாளர்கள் தங்கும் விடுதிக்கு மாவட்ட ஆட்சியரிடம் உரிய தரச்சான்று பெற வேண்டும். தங்கும் இடத்திலேயே சமையலறை அமைத்துத் தரமான உணவுகளைச் சமைத்து, உரிய நேரத்தில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவசர நிமித்தம் காரணமாக விடுப்புக் கேட்கும்போது வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனத்தினர், தமிழ்நாடு அரசு தெரிவித்த அனைத்து அறிவுறுத்தல்களை தவறாமல் செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலை தரப்பில், பெண் தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும், மேலும், இந்நிறுவனத்தில் பணிபுரியும் 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்படுகிறது எனவும், அதனை ஒப்பந்ததாரர்கள் தரமாக வழங்குவதை இனி உறுதி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிப்காட் நிறுவனத்தின் மூலமாக, வல்லம் வடகாலில், சுமார் 18,750 பேர்கள் தங்கும் அளவில், ரூபாய் 570 கோடி செலவில், 20 ஏக்கர் நிலப்பரப்பில், 8 தொகுதிகளாக, 11 மாடிகள் கொண்டதாக ஊழியர்கள் தங்குவதற்கென விடுதிகள் வடிவமைக்கப்படவுள்ளது. புதிய கட்டுமான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இப்பணிகள் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இக்கூட்டத்தில், அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அரசுச் செயலாளர், தொழில்துறை சிறப்புச் செயலாளர், வழிகாட்டு மையத்தின் மேலாண்மை இயக்குநர், சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பாக்ஸ்கான் நிறுவனத்தின் இயக்குநர் ஆலோசகர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
