தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் அமைந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி ஆளுநர் மாளிகை முன்புறம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. உயர்மட்ட பாதுகாப்பில் இருக்கும் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு ஆளுநர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் (42) என்பவரை உடனடியாக காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் வெடிக்காத நிலையில் இருந்த மேலும் இரண்டு குண்டுகளையும் காவல்துறையினர் கைது செய்தனர். கருக்கா வினோத்துக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று கருதி இந்த வழக்கு தமிழக காவல்துறையிடம் இருந்து என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

ரவுடி கருக்கா வினோத் குற்றவாளி

இந்த வழக்கு சென்னை பூந்தமல்லியில் வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ரவுடி கருக்கா வினோத்துக்கு எதிராக 680 பக்கம் கொண்ட குற்ற பத்திரிக்கையை என்.ஐ.ஏ தாக்கல் செய்திருந்தது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் சிறை தண்டனை

அதாவது ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி மலர்விழி தீர்ப்பு வழங்கினார். மிக முக்கியமான வழக்கு என்பதால் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.