அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை: முதல்வர் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல்!
அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறையை கூடுதலாக அளிக்கும் முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்
தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதரம் இல்லை எனக் கூறி இருவரையும் 2016ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசம் அளித்து தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் உடனடியாக பொன்முடி இழந்துள்ளார்.
இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோர் நலன் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு அமைச்சர் பொன்முடி வகித்து வந்த உயர் கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இதற்கான பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார். இந்த நிலையில், அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறையை கூடுதலாக அளிக்கும் முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலம், பிற்படுத்தப்பட்டோர் நலன் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ராஜ கண்ணப்பன் வசம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை, கைத்தறித்துறை அமைச்சர் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: 108 அடி ஊதுபத்தியை காணிக்கை அளிக்கும் பக்தர்!
முன்னதாக, அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், மேல்முறையீட்டு விசாரணையில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டால் பொன்முடிக்கு மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி கிடைக்கும் எனவும் அவரது வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
தீர்ப்பின் நகல் இன்று கிடைத்ததும், வழக்கறிஞர் உடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் வருகிற ஜனவரி மாதம் 2ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அமைச்சர் பொன்முடி தரப்பு திட்டமிட்டுள்ளது.