அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 108 அடி நீளம் கொண்ட ஊதுபத்தியை தயார் செய்து வரும் பக்தர் ஒருவர் அதனை காணிக்கையாக அளிக்கவுள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் ஏற்பாடுகள் நிறைவடையும் எனவும், பிரான் பிரதிஷ்டைக்கான பூஜை ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, ஜனவரி 24 முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை சடங்குகள் மரபுகளின்படி நடைபெறவுள்ளது. இதையடுத்து, ஜனவரி 23ஆம் தேதி முதல் அயோத்தி ராமர் கோயில் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படவுள்ளது.
அதேசமயம், கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன. சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ராமர் கோவில் மாதிரி வைர நெக்லஸ் செய்து பரிசாக கொடுக்க உள்ளார். அதே போல குஜராத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 108 அடி நீளம் கொண்ட பெரிய ஊதுபத்தியை தயார் செய்து வருகிறார். இதனை அவர் ராமர் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கவுள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் வசிக்கும் பிஹாபாய் பர்வாத் எனும் ராம பக்தர். ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடுவதற்காக 3.5 அடி அகலமும், 108 அடி நீளமும் கொண்ட ஒரு பெரிய ஊதுபத்தியை உருவாக்கியுள்ளார். இந்த ஊதுபத்தி ஒரு மாதம் முதல் ஒன்றரை மாதங்கள் வரை எரியும் என அவர் கூறுகிறார். யாகத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்கள் அதன் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை உடனே இழந்த பொன்முடி: யார் இந்த லில்லி தாமஸ்?
சுமார் 3,500 கிராம் எடையுள்ள இந்த ஊதுபத்தி சாலை வழியாக தேரில் அயோத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி, குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து ஜனவரி 1ஆம் தேதி காலை 10 மணிக்கு அயோத்திக்கு பிஹாபாய் பர்வாத் புறப்படவுள்ளார். இந்த பிரமாண்ட ஊதுபத்தியானது ஹோலோல், கலோல், கோத்ரா ஷெஹ்ரா, அரபல்லி, மொடாசா, ஷாம்லாஜி வழியாக குஜராத் எல்லையை கடந்து ராஜஸ்தானுக்குள் நுழைகிறது. அங்கிருந்து கெர்வாரா, உதய்பூர், மால்வாரா, சவாரியா சேத் மந்திர், சித்தோர்கர், பில்வாரா, தயா, கிஷன்கர் ஆகிய இடங்களுக்கு செல்கிறது. பின்னர், உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்குள் நுழைந்து ஆக்ரா, கான்பூர், லக்னோ வழியாக அயோத்தியை அடையவுள்ளது.
இந்த ஊதுபத்தியை கவனமாக எடுத்துச் செல்ல நீண்ட டிரெய்லருடன் இணைக்கப்பட்ட தேர் தயாராகி வருகிறது. இது ராஜஸ்தானில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள ராமர் கோவில் வரை சுமார் 1,800 கிலோமீட்டர் தூரத்தை கடக்கவுள்ளது. இந்த மெகா சைஸ் ஊதுபத்தியை ஒவ்வொரு நாளும் இரண்டரை முதல் மூன்று மணி நேரம் வரை சுமார் ஆறு மாதங்களாக ஒற்றை ஆளாக பிஹாபாய் பர்வாத் தயாரித்து வருகிறார். மழைக்காலங்களில் ஈரமாகி விடாமல் இதன் மீது மெல்லிய பிளாஸ்டிக் உறையும் பொருத்தப்பட்டது. டிசம்பர் இறுதிக்குள் இந்த ஊதுபத்தி முழுமையாக தயாராகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தயாரிக்க தனக்கு ராம பக்தர்கள் உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.
