மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கபில் சிபலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய தற்போதைய தலைவர் ஆதிஷ் அகர்வால் 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கபில் சிபலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “சுதந்திரம், அரசியலமைப்பு பாதுகாப்பான கைகளில் இருப்பதை கபில் சிபலின் வெற்றி உறுதி செய்கிறது. நீதி, ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்த அவரது தலைமையில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட கபில் சிபல் 1066 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மூத்த வழக்கறிஞர் பிரதீப் ராய் 689 வாக்குகளுடன் இரண்டாமிடமும், தற்போதைய தலைவரும் மூத்த வழக்கறிஞருமானஆதிஷ் அகர்வால் 296 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பிரியா ஹிங்கோராணி, திரிபுராரி ரே, நீரஜ் ஸ்ரீவஸ்தவா உள்ளிடோரும் தேர்தலில் போட்டியிட்டனர்.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி சுக்குநூறாக உடைந்து விடும்: பிரதமர் மோடி!
தொடர்ந்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக கபில் சிபல் பொறுப்பேற்றுக் கொண்டார். துணைத் தலைவராக ரச்சனா ஸ்ரீவஸ்தவாவும், செயலாளராக விக்ராந்த் யாதவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக கபில் சிபல் பதவியேற்பது இது 4ஆவது முறையாகும். இதற்கு முன்பு 1995-96, 1997-98, 2001 ஆகிய ஆண்டுகளில் அவர் தலைவராக இருந்துள்ளார்.