லேசான தலைச்சுற்றல் காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதயத்துடிப்பில் ஏற்பட்ட வேறுபாடுகளே தலைச்சுற்றலுக்குக் காரணம் என மருத்துவப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அப்போலோ மருத்துவமனையிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த ஜூலை 21-ஆம் தேதி காலை வழக்கமான நடைப்பயிற்சியின்போது ஏற்பட்ட லேசான தலைச்சுற்றல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செய்யப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகளே தலைச்சுற்றலுக்குக் காரணம் என்பது கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஜி.செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது, அதில் எந்தவித அடைப்பும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

Scroll to load tweet…

சிகிச்சைக்குப் பிறகு முதலமைச்சர் நலமுடன் இருப்பதாகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த ஓய்வுக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான அரசுப் பணிகளில் ஈடுபடலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடியே காணொலி வாயிலாக "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 7 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று வீடு திரும்பியிருப்பது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாள் ஓய்வுக்குப் பிறகு, திட்டமிட்ட அரசு நிகழ்வுகளிலும், கட்சிப் பணிகளிலும் அவர் மீண்டும் முழு வீச்சில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.