செங்கல்பட்டு சாலை விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
சென்னையில் இருந்து புதுச்சேரி வரை காரில் சென்றுவிட்டு ஒரே காரில் ஐந்து பேர் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த கார் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது மாடு குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க காரை இடதுபுறமாக திருப்பிய போது சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், வாயலூர் கிராமம், கிழக்குக் கடற்கரை சாலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணிக்கு பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மரத்தின் மீது மோதிய விபத்தில், அதில் பயணம் செய்த சென்னைச் சேர்ந்த ராஜேஷ், மாதேஷ், யுவராஜ், ஏழுமலை ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், விக்னேஸ்வரன் என்பவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
நியூஸ் க்ளிக் நிறுவனரை உடனடியாக விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், கடலூர் மாவட்டம் மேல்பட்டம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல். இவர் வேலை காரணமாக வெளிநாடு செல்கிறார். இதற்காக அவரது குடும்பத்தினர் சென்னை விமான நிலையத்திற்கு வந்து அவரை வழியனுப்பி வைத்துவிட்டு, சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் என்ற இடத்தில் முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்திற்கும் இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த இரு வேறு விபத்தில் சிக்கி மொத்தம் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.