மாரிமுத்து மறைவு தமிழ்த்திரையுலகுக்கு பேரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
நடிகர் மாரிமுத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட படங்களின் இயக்குநரான இவர், பரியேறும் பெருமாள் படத்திலும், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார். எதிர்நீச்சல் தொடரில் இவர் பேசும் வசனங்களுக்காக தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது.
இந்த நிலையில், பிரபல நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. அவரது மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏராளமானோர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் மாரிமுத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
கடைசி வரை நிறைவேறாமல் போன மாரிமுத்துவின் ஆசை! கனவு இல்லத்தில் ஒரு நாள் கூட வாழாமல் உயிர்விட்ட சோகம்!
தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர் மாரிமுத்து. ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார். மேலும், பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.