இதுதான் பத்திரிகை தர்மம்: பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!
விகடனும் கலைஞரும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், பத்திரிகைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்
சென்னை, கலைவாணர் அரங்கத்தில், விகடன் குழுமத்தின் சார்பில் “கலைஞர் 100 - விகடனும் கலைஞரும்” நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அதனை நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “பத்திரிக்கையாளர் - எழுத்தாளர் - அரசியல் ஆளுமை - திரையுலக கதை வசனகர்த்தா - நாடக நடிகர் - சின்னத்திரை வசனகர்த்தா என்று பன்முக ஆற்றலைக் கொண்டவர் கலைஞர் என்பதால், அவரை ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் அனைவருமே போற்றுவது பொருத்தமான ஒன்று.” என்று குறிப்பிட்டார்.
பேரறிஞர் அண்ணாவை பற்றி 'தி இந்து' குழுமத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 'மாபெரும் தமிழ்க் கனவு'. அதேபோல், கலைஞரை பற்றி தயாரிக்கப்பட்ட 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்' போல, விகடன் சார்பில் 'கலைஞர் 100' புத்தகத்தை இந்த மேடைகளில், நாம் பார்க்கிறோம், இனி அனைத்து மேடைகளிலும் இதைப் பார்க்கத்தான் போகிறோம். இந்த புத்தகத்தை அனைவரும் வாங்கி படிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
அடுத்த பொங்கலுக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம்: உதயநிதி சொன்ன தகவல்!
மேலும், திமுகவுக்கும், விகடனுக்கும் இருந்த நெருக்கம் குறித்தும், கலைஞர் கருணாநிதிக்கும் விகடனுக்கும் இருந்த நட்பு குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேசினார். “எத்தனையோ அரசியல் மாறுபாடுகள் - கருத்து வேறுபாடுகள் இவற்றிற்கு இடையே எல்லாவற்றையும் கடந்து அன்பும், நட்பும், தூய்மையான பாசமும் இருவரிடையே நிலவிட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு தோழமை வேண்டும் என்றால், அது நானும், பாலுவும் கொண்டுள்ள தோழமைதான்.” என்று கலைஞர் கருணாநிதி எழுதியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒரு ஆட்சி செயல்படுத்தி வருகிற நல்ல திட்டங்களை மனப்பூர்வமாக ஆதரித்து எழுதுங்கள். அப்படி எழுதினால்தான், நீங்கள் விமர்சிக்கும்போதும், அதற்கு உண்மையான மதிப்பும் மரியாதையும் இருக்கும்.” என்று பத்திரிகை நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தார். “எதையும் ஆதரித்து எழுதாமல் - விமர்சித்து மட்டுமே எழுதினால், அந்த விமர்சனங்களுக்கு மதிப்பே இருக்காது. சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் அதை சுட்டிக் காட்டுவதும்தான் நடுநிலையான பத்திரிகைக்கு இருக்கக்கூடிய தர்மம்! அதன்படி தமிழ்நாட்டு ஊடகங்கள் செயல்பட வேண்டும்.” என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
“நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக, இந்த சமுதாயத்திற்காக, இந்த இனத்திற்காக. ஏன் என்றால், இன்று ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. இதை அரசியல்ரீதியாக நாங்கள் எதிர்கொண்டு தடுப்போம். ஆனால், அது மட்டும் போதாது. ஜனநாயகத்தினுடைய நான்காவது தூணாக இருப்பது, போற்றப்படுவது, பத்திரிகைகள்தான். எனவே, தங்களுடைய கடமையை நீங்கள் செய்ய வேண்டும்.” என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
மேலும், “உச்சநீதிமன்றமாக இருந்தாலும், தேர்தல் ஆணையமாக இருந்தாலும், அரசியல் சட்ட அமைப்புகள் அனைத்தும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்ற இந்த நேரத்தில், ஜனநாயகம் காக்க - அதன் மூலமாக இந்தியாவை காக்க வேண்டிய கடமை என்பது நான்காவது தூணாக இருக்கின்ற பத்திரிகைகளிடம் தான் இருக்கிறது. ஜனநாயகம் காக்கப்பட்டால் தான் பத்திரிக்கைத் துறை என்பதே எதிர்காலத்தில் இருக்கும்.” என்று முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.