நீங்க லிஸ்டில் இல்லைங்க.. சீமானை லெப்ட் ஹேண்டில் டீல் செய்த தவெக தலைவர் விஜய்
ஈரோட்டில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை தங்கள் கொள்கை வழிகாட்டிகளாக குறிப்பிட்டார்.

சீமான் பற்றி விஜய்
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரை கூட்டத்தில், கட்சித் தலைவர் நடிகர் விஜய் உரையாற்றினார். கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு, 81 நாட்கள் கழித்து அவர் பொதுவெளியில் மக்களைச் சந்தித்து பேசிய முதல் நிகழ்ச்சி என்பதால் இந்தக் கூட்டம் அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை ஈர்த்தது.
தனது உரையில் விஜய், “நல்ல காரியங்களை மஞ்சளுடன் தான் தொடங்குவார்கள். மஞ்சளுக்கு தனி வைப்ரேஷன் உண்டு. தவெக கொடியிலும் மஞ்சள் நிறம் இருக்கிறது. மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி ஈரோடு. விவசாயத்திற்கு பெயர் பெற்ற இந்த மண் எங்களுக்கு பெருமை” என பேசினார். காலிங்கராயன் அணை மற்றும் கால்வாய் ஈரோட்டின் வாழ்வாதாரத்திற்கு கவசமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அந்த காலத்தில் காலிங்கராயன் அணையை கட்டியவருக்கு அவரது தாய் கொடுத்த தைரியம் போல, இன்று எனக்கு இந்த மக்கள் தைரியம் தருகிறார்கள். அந்த உறவை சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள். ஆனால் இது நேற்றைய உறவு அல்ல. 35 ஆண்டுகளுக்கு மேலான உறவு. மக்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தேன், மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள்” என்று விஜய் உணர்ச்சிபூர்வமாக பேசினார். அத்திகடவு–அவிநாசி திட்டத்தை இன்று விரிவுபடுத்தினால் மூன்று மாவட்டங்களில் பல லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று கூறினார்.
ஈரோடு கூட்டத்தில் விஜய் பேச்சு
பெரியார் குறித்தும் விஜய் பேசினார், "இங்கே தான் நம் கொள்கை தலைவர் தந்தை பெரியார் பிறந்தார். நூறு ஆண்டுகளுக்கு முன்பே சமூகநீதியை பேசினார். பெரியாரிடமிருந்து கொள்கைகளை எடுத்தோம்; அண்ணா, எம்ஜிஆரிடமிருந்து தேர்தல் அரசியல் நடைமுறையை கற்றுக்கொண்டோம். அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து" என்றார்.
மேலும், “அண்ணா எங்களுடையவர், எம்ஜிஆர் எங்களுடையவர். அவர்களை யார் சொந்தம் கொண்டாடக் கூடாது என்று கூற முடியாது. 2026 தேர்தலில் அவர்களை நினைவுகூர முடியாது என்று சொல்ல முடியாது” எனவும் விஜய் தெரிவித்தார். தன்னிடம் பயமில்லை என்றும், அரசியலில் நேர்மையாகப் பயணித்து வருவதாகவும் கூறினார்.
உரையின் முடிவில், “மக்களை நம்பியே அரசியலுக்கு வந்துள்ளேன். வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பேன். என்னை நீங்கள் கைவிட மாட்டீர்கள் தானே?” என்று விஜய் தொண்டர்களிடம் கேட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில், அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி, தங்கள் ஆதரவை உறுதியாக வெளிப்படுத்தினர். பாஜகவை எதிர்க்க முடியாது. களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது 2026 தேர்தலில் எம்.ஜி.ஆர், அண்ணாவை சொந்தம் கொண்டாட முடியாதுனு சொல்ல முடியாது. என்று கூறி நாம் தமிழர் கட்சியையும், சீமானையும் மறைமுகமாக தாக்கி பேசினார் விஜய்.

