தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சினைகளை களையும் பொருட்டு, அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு திட்டத்தை தமிழ்நாடு விலங்குகள் நல ஆணையம் நடத்தவுள்ளது

தமிழ்நாட்டின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், சாலைகளில் மக்கள் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பணி முடிந்து வீடுகளுக்கு திரும்புபவர்கள் தெரு நாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். சாலைகளில் செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தெரு நாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதனால், உயிரிழப்பு போன்ற பெரிய பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

ஆனால், நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, அதன் எண்ணிக்கையை நிர்வகிப்பதற்கும், சரியான தடுப்பூசியை உறுதி செய்வதற்கும் தற்போதைய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இதனால், நாய்களின் தாக்குதல்கள் மற்றும் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ரேபிஸ் போன்ற நாய்களால் ஏற்படும் நோய்களும் அதிகரித்து வருகின்றன.

பிரதமர் மோடிக்கு சாதகமாக 80 சதவீத இந்தியர்கள்: ஆய்வில் தகவல்!

இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் தீர்க்கமான சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் டவுன் பஞ்சாயத்துகளைச் சேர்ந்த நகர சுகாதார அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியானது ஆகஸ்ட் 31ஆம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் 1 மணி வரை சென்னை ரிப்பன் பில்டிங் வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை அரங்கில் நடைபெறவுள்ளது.

விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் என தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, விலங்கு பிறப்பு கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடர்பான செயல்முறையின் போது பின்பற்ற வேண்டிய முறையான நெறிமுறைகள் குறித்தும் வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 இன் புதுப்பிக்கப்பட்ட விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகளின்படி, இவற்றை செயல்படுத்துவது உறுதிப்படுத்தப்படும்.