Tiruvannamalai Temple: மாட்டுப்பொங்கல் அன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசன வரிசையில் ஏற்பட்ட தகராறில் பக்தர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். ஆந்திர பக்தர்கள் வரிசையை மீற முயன்றதால் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவிலில் தினமும் பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவல பாதையில் கிரிவலம் வருகின்றனர்.

இந்நிலையில் மாட்டுபொங்கல் தினமான நேற்று வழக்கத்தை விட அண்ணாமலையார் திருக்கோவிலுக்குள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பக்தர்கள் ராஜகோபுரம் வழியே நீண்ட வரிசையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஆயிரம் கால் மண்டபம் அருகே பக்தர்கள் வரிசையில் சென்று கொண்டிருந்தபோது, ஆந்திர பக்தர்கள் வரிசையில் குறுக்கே சென்று சாமி தரிசனம் செய்ய முயற்சித்துள்ளனர். இதனால் வரிசையில் நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கும் ஆந்திர பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. ஒருவரை ஒருவர் தலை முடியை பிடித்து அடித்து சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் அண்ணாமலையார் கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது ஒரு புறம் இருக்க கோவில் சார்பில் போடப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வேலிகளை தாண்டியும் பக்தர்கள் குதித்து சாமி தரிசனம் செய்ய முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு காவலர்கள் மட்டும் இருந்ததால் அவர்களால் ஒருவரை ஒருவர் தடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் விசேஷ நாட்களில் போதுமான காவலர்களை ஆங்காங்கே திருக்கோவிலுக்குள் நியமித்து வரிசைகளை கட்டுப்படுத்துவதுடன் இதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது ஆன்மீக பக்தர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்ணாமலையார் திருக்கோவிலுக்குள் பக்தர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.