திருப்பூர் மாவட்டத்தில் தடையை மீறி பேரணியில் செல்ல முற்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 950 பேரை காவலாளர்கள் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

தமிழக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க. எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராகவும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுத்தனர்.

இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு காவலாளர்கள் அனுமதி தரவில்லை. இருந்தும், தடையை மீறி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தனர். அவர்களை காவலாளர்கள் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்திலும் காவலாளர்களின் தடையை மீறி ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கேயம் பேருந்து நிலையம் அருகே ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் நேற்று மாலையில் குவிந்தனர். பின்னர் அவர்கள் காவல் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அப்போது காங்கேயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உ.தனியரசு, காங்கேயம் மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப ஓபிஎஸ்-ஸுக்கு ஆதரவாகவும், எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராகவும், வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கேயம் ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் மைனர் பழனிசாமி தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வி முருகேசன் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட முன்னாள் கவுன்சிலர் டி.ஆர்.கோவிந்தசாமி, வெள்ளகோவில் நகராட்சி முன்னாள் தலைவர் கந்தசாமி, சென்னிமலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கே.ஏ.கருப்புசாமி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதன்படி மொத்தம் 260 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் பல்லடம் அண்ணா சிலை அருகே நேற்று மாலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததுடன் அங்கிருந்து பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அங்கிருந்து பேரணியாக செல்ல முயன்ற அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பரமசிவம் மற்றும் புத்தெரிச்சல் பாபு, வேலாயுதம்பாளையம் சண்முகம், தண்ணீர் பந்தல் நடராஜன், எஸ்.எஸ்.மணியன், பாலுபழனிசாமி மற்றும் 82 பெண்கள் உள்பட 512 பேர் அடக்கம்.

பெருமாநல்லூர் நால்ரோட்டில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் காவல் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர் பாலு, எம்.ஜி.ஆர்.மன்ற முன்னாள் துணைத்தலைவர் பூபதி, முத்து மற்றும் ஜெ.தீபா பேரவையினர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 127 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் காவலாளர்களின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மூர்த்தி, ஜெயபால், முத்துசரவணன், வேலாயுதம்பாளயம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தம்பி என்கிற ராமசாமி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து பேரணியாக செல்ல முயன்றதை தொடர்ந்து 31 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

இதன்படி நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் 950 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.