Tiruchendur Soorasamharam 2025: திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வருகை புரிகின்றனர். இங்கு நடக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நாளை (27 ம் தேதி) சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில், இதைக்காண பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்

இந்த நிலையில், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று தாம்பரம்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது தாம்பரம் திருநெல்வேலி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06135) இன்று இரவு 9.35 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாளை காலை 8 மணிக்கு நெல்லை சென்றடையும்.

திருச்செந்தூர் – தாம்பரம்

மறுமார்க்கமாக திருச்செந்தூர் – தாம்பரம் அதிவேக சிறப்பு இரயில் (வ.எண்: 06136) நாளை இரவு 10.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில்களில் 1- குளிர்சாதன முதல் வகுப்புப் பெட்டி, 11- முன்பதிவு அமரும் வசதி கொண்ட பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், மற்றும் 2- இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இருக்கும்.

நெல்லை-திருச்செந்தூர்

இதேபோல் நெல்லை-திருச்செந்தூர் இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. திருசெந்தூர்-நெல்லை சிறப்பு ரயில் (வ.எண்:06106) திருச்செந்தூரில் இருந்து நாளை இரவு 9 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக இந்த ரயில் நெல்லையில் இருந்து நாளை நள்ளிரவு 11 மணிக்கு புறப்பட்டு. நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். இந்த ரயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.