உண்டியல் சேமிப்பு பணத்தை நிவாரணப் பணிகளுக்கு வழங்கிய சிறுமி: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
நெல்லையை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உண்டியல் சேமிப்பு பணத்தை நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று (21.12.2023) காலை சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி, மறவன் மடம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, வெள்ள சேத விவரங்களை கேட்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
செயின்ட் மேரிஸ் பள்ளியில் உள்ள நிவாரண மையத்திற்கு சென்று முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, எட்டையபுரம் 3-வது கேட் மேம்பாலத்திலிருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும், குறிஞ்சி நகர் போல்பேட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியையும் பார்வையிட்டு, சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியினை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக இன்று மாலை, திருநெல்வேலி சென்றடைந்தார்.
திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலைய சந்திப்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆறுதல் கூறி, அவர்களுக்கு முகாம்களில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்து, முகாம்களில் தங்கியுள்ள சுமார் 1000 நபர்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை, போர்வை, பாய், பிஸ்கட் மற்றும் ரொட்டி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
அப்போது, ஆட்டோ ஓட்டுநர் பாலசுப்பிரமணியத்தின் இரண்டாம் வகுப்பு பயிலும் மகள் செல்வி சேவிதா பகவதி தனது உண்டியல் சேமிப்பு பணத்தை நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினார். அச்சிறுமியை முதலமைச்சர் பாராட்டி வாழ்த்தினார்.
எம்.எஸ்.எம்.இ துறை வேலைகள்: தமிழ்நாடு இரண்டாம் இடம் - மத்திய அரசு பதில்!
திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க பெறப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களின் விவரங்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்த வர்த்தக மையத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இதுநாள் வரை பெறப்பட்ட நிவாரணப் பொருட்களான 14,010 கிலோ அரிசி, 3195 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, 6050 லிட்டர் பால், 4590 கிலோ பால் பவுடர், 5761 பிஸ்கட்/ரொட்டி/ரஸ்க், 5136 லிட்டர் சமையல் எண்ணெய், 43,416 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 93,666 இதர அத்தியாவசியப் பொருட்களான தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, கொசுவத்தி சுருள், போர்வை, பாய், துண்டு மற்றும் நாப்கின் போன்ற நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, இவற்றில் 91 சதவிகித பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது என்று அரசு உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும், தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.