கிருஷ்ணகிரி

விபத்து ஏற்படுத்திவிட்டு நஷ்டஈடு தராததால் நீதிமன்ற உத்தரவுப்படி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் நின்ற மூன்று அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் மேகாதிருகா. இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26-ஆம் தேதி காரில் தனது நண்பர்கள் ஜோயல்ஸ்வரப் மற்றும் நஜீர்உசேன் ஆகியோருடன் சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்டேகுப்பம் அருகே சென்றபோது, ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த அரசு பேருந்து, கார் மீது மோதியது. இந்த விபத்தில் ஜோயல்ஸ்வரப், நஜீர்உசேன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

தீ காயங்களுடன் மீட்கப்பட்ட மேகாதிருகா, கிருஷ்ணகிரி, பெங்களூரு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த விபத்து தொடர்பான வழக்கு, நடந்து வந்தது. இதில் கடந்த 2015-ஆம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மேகாதிருகாவிற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடாக ரூ.88 இலட்சத்து 54 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தொகையை அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்கவில்லை. இதனையடுத்து நிறைவேற்றல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் 17-ஆம் தேதி இழப்பீடு தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடியே 45 இலட்சத்து 94 ஆயிரத்து 27 வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அப்போதும் போக்குவரத்து கழகம் அந்தத் தொகையை வழங்கவில்லை.

பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் நின்ற அரசு பேருந்து நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் ஜோயல்ஸ்வரப் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக ரூ.28 இலட்சத்து 65 ஆயிரத்து 80-மும், நஜீர்உசேன் குடும்பத்தினருக்கு ரூ.90 இலட்சத்து 82 ஆயிரத்து 141-ம் நஷ்ட ஈடு வழங்காததால் மேலும் இரண்டு அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.