Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் போலியாக ஸ்டேட் பேங்க் நடத்திய மூவர் கைது!

தமிழகத்தில் போலியாக பாரத ஸ்டேட் வங்கியின் கிளை நடத்தி வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Three people in Tamil Nadu caught running fake SBI branch smp
Author
First Published Jan 5, 2024, 7:48 PM IST | Last Updated Jan 5, 2024, 7:48 PM IST

தமிழகத்தின் பண்ருட்டியில், கடந்த மூன்று மாதங்களாக போலியாக பாரத ஸ்டேட் வங்கியின் கிளை நடத்தி வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்செயலின் மூளையாக செயல்பட்டவரின் பெற்றோர் இருவருமே முன்னாள் வங்கி ஊழியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த தகவலை உறுதிபடுத்திய காவல் ஆய்வாளர் அம்பேத்கர், போலியாக பாரத ஸ்டேட் வங்கியின் கிளை நடத்தியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குற்றச் செயல்களுக்கு மூளையாக செயல்பட்டவரின் பெயர் கமல்பாபு எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கமல்பாபுவின் பெற்றோர் இருவருமே முன்னாள் வங்கி ஊழியர்கள். அவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவரது தாயார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

குற்றத்தில் ஈடுபட்ட மற்றொருவர் பண்ருட்டியில் அச்சகம் நடத்தி வருபவர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த அச்சகத்தில் இருந்துதான் மூவரும் வங்கியை நடத்துவதற்கு தேவையான அனைத்து ரசீதுகள், சலான்கள் மற்றும் பிற ஆவணங்களை அச்சடித்து வந்துள்ளனர். மூன்றாவது நபர் ரப்பர் ஸ்டாம்புகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்.

ராஜஸ்தான் அமைச்சரவை: புதிய அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு - யாருக்கு எந்த துறை?

பண்ருட்டியில் சந்தேகத்திற்கிடமாக செயல்பட்டு வந்த இந்த போலி பாரத ஸ்டேட் வங்கியின் கிளையை கவனித்த எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர், இதுகுறித்து உண்மையான பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்த எஸ்பிஐ மண்டல அலுவலகம், பண்ருட்டியில் இரண்டு எஸ்பிஐ கிளைகள் மட்டுமே இருப்பதாகவும், இந்த புதிய மூன்றாவது கிளை அவற்றின் ஆவணங்களில் எங்குமே இல்லை என்றும் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, உண்மையான வங்கியின் மேலாளர் போலியான வங்கிக்கு வந்து பார்வையிட்டுள்ளார். பார்ப்பதற்கு அப்படியே அச்சுஅசலாக எஸ்பிஐ கிளை போன்றே உட்கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பண்ருட்டியில், கடந்த மூன்று மாதங்களாக போலியாக பாரத ஸ்டேட் வங்கியின் கிளை நடத்தி வந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். அந்த போலி வங்கியில், பணப்பரிவர்த்தனை எதுவும் இதுவரை நடைபெறவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios