ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் உட்பட அமைச்சர்களாக பொறுப்பேற்ற அனைவருக்கும் இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. முதல்முறை எம்.எல்.ஏ.வான பஜன்லால் சிங் முதல்வராகவும், துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோரும் பொறுப்பேற்றனர். ஆனால், அமைச்சரவை அமைப்பதில் தாமதம் செய்வதாக பாஜக மீது எதிக்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.
அதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி 22 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் உட்பட அமைச்சர்களாக பொறுப்பேற்ற அனைவருக்கும் இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையின் துறைகள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். முதல்வர், துணை முதல்வர்கள் உள்பட 15 பேருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்தும், தன்னிச்சை பொறுப்பில் ஐந்து பேர் உள்பட 10 பேருக்கு மாநில அமைச்சர் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பணியாளர்கள் துறை, கலால் துறை, உள்துறைத் துறை, திட்டமிடல் துறை, பொது நிர்வாகத் துறை, கொள்கை உருவாக்கும் பிரிவு - தலைமைச் செயலகம், தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை, ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) ஆகிய 8 துறைகளை முதல்வர் பஜன்லால் சிங் தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார்.
துணை முதல்வர் தியா குமாரிக்கு, நிதித் துறை, சுற்றுலாத் துறை, கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் தொல்லியல் துறை, பொதுப்பணித் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மற்றொரு துணை முதல்வரான பிரேம் சந்த் பைரவாவிற்கு, தொழில்நுட்பக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) துறை, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்ற கேபினட் அமைச்சர்களான கிரோடி லால் மீனாவுக்கு விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளும், கஜேந்திர சிங் கிம்சருக்கு மருத்துவம் மற்றும் சுகாதாரம், ராஜவர்தன் ரத்தோருக்கு தொழில்கள், தகவல் தொடர்புத்துறை, மதன் திலாவருக்கு பள்ளிக் கல்வித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாலத்தீவுக்கு மாற்றாகும் லட்சத்தீவு? பிரதமர் மோடி வருகைக்கு பிறகு கூகுள் தேடலில் முதலிடம்!
கன்ஹையலாலுக்கு பொது சுகாதார பொறியியல் துறை, ஜோகரம் படேலுக்கு பாராளுமன்ற விவகாரங்கள் துறை, சட்டத்துறை, சுரேஷ் சிங் ராவத்திற்கு நீர்வளத் துறை, பாபுலால் கரடிக்கு பழங்குடியினர் பிராந்திய மேம்பாட்டுத் துறை, ஹேமந்த் மீனாவுக்கு வருவாய் துறை, ஜோரா ராம் குமாவத்திற்கு கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, சுமித் கோதாராவுக்கு உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை, அவினாஷ் கெலாட்டுக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
