மாலத்தீவுக்கு மாற்றாகும் லட்சத்தீவு? பிரதமர் மோடி வருகைக்கு பிறகு கூகுள் தேடலில் முதலிடம்!

பிரதமர் மோடியின் வருகைக்குப் பிறகு கூகுள் தேடலில் லட்சத்தீவு முதலிடத்தில் உள்ளது.
 

Lakshadweep remains on Top in Google daily search trends for today as well smp

கொரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் சுற்றுலா வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜாபர்வான் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள துலிப் கார்டனை பார்வையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் மக்களை கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக, காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு சுற்றுலாப் பயணிகளால் நிறைந்தது.

அதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் பிரதமர் மோடி சுற்றுலா தொடர்பான தனது பார்வையை பரவலாக்கியுள்ளார். அதன்படி, நேற்று முன் தினம் லட்சத்தீவுக்கு பயணமான பிரதமர் மோடி, சமூக ஊடகங்களில் அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து, மக்களை லட்சத்தீவுக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விளைவாக, கூகுள் தேடலில் லட்சத்தீவு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

 

 

பிரதமர் தனது லட்சத்தீவு பயணத்தின் போது ஸ்நோர்கெலிங் சென்றார். ஸ்நோர்கெல்லிங் என்பது வாயில் ஒரு குழாயை வைத்து சுவாசித்து கொண்டு கடலில் நீந்தும் ஒரு முறையாகும். மேலும், அழகிய கடற்கரை மணலில் நடைபயிற்சி மேற்கொண்டார்.  ஓய்வாக அமர்ந்திருந்தார். இந்த புகைப்படங்களை அவர் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தார். அந்த படங்கள் வைரலாகின. இதனால் லட்சத்தீவு குறித்த தகவல்களை கூகுளில் ஏராளமானோர் சேகரித்து வருகின்றனர். வரும் காலங்களில் லட்சத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

பிரதமரின் இந்த முயற்சி, சில காலமாக இந்தியாவுக்கு விரோதமாக நடந்து கொள்ளும் மாலத்தீவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள்.

 

 

அமைதியான கடற்கரைகள், தெளிவான கடல் நீர், வெள்ளை மணல், நட்பு மனிதர்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இயற்கை என இந்தியாவின் மிக அழகான இடங்களில் ஒன்றாக லட்சத்தீவு உள்ளது. இருப்பினும், லட்சத்தீவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவாக உள்ளது. பயணக் கட்டுப்பாடுகள், நீண்ட ஆவணங்கள் மற்றும் தகவல் பற்றாக்குறை ஆகியவை இதற்குக் காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் லட்சத்தீவுக்கு ஒரு லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளே வந்துள்ளனர். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அங்கு செல்வது மிகக் குறைவு.

ஆனால், இதுவே மாலத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சுற்றுலாத் தலங்களைப் பார்த்தால், லட்சத்தீவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே பளபளக்கும் கடல் நீர், வெள்ளை மணற்பரப்பு, பவளப்பாறைகள் என ஏராளமனவைகள் இரண்டு இடங்களிலுமே உள்ளன. ஆனாலும், பல இந்தியர்கள் லட்சத்தீவுக்குப் பதிலாக மாலத்தீவுக்குச் சென்று சுற்றிப்பார்க்கிறார்கள்.

 2021 ஆம் ஆண்டில் 2.91 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களும், 2022 ஆம் ஆண்டில் 2.41 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மாலத்தீவுகளுக்குச் சென்றுள்ளனர். 2023 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி வரை இந்திய சுற்றுலாப் பயணிகள் 1,00,915 பேர் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்.

அதன்படி, மாலத்தீவுகளின் சுற்றுலாத் துறைக்கு இந்தியா முக்கிய பங்களிக்கிறது. ஆனாலும், மாலத்தீவு அரசு சில காலமாக இந்தியாவுடன் விரோத போக்கை கையாள்கிறது. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது. மாலத்தீவின் புதிய அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவாக உள்ளது. பதவியேற்ற பிறகு, மாலத்தீவு அதிபர் முய்ஸு முதலில் துருக்கிக்கும் பின்னர் சீனாவுக்கும் சென்றார். துருக்கியும், சீனாவும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்படும் நாடுகளாகக் கருதப்படுகின்றன.

இந்திய விளையாட்டுப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு!

இந்த பின்னணியில், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணமும், அங்கு செல்லுமாறு அவர் விடுத்துள்ள வேண்டுகோளும் அமைந்துள்ளது. பிரதமரின் அழைப்பை ஏற்று பலரும் லட்சத்தீவுக்கு சென்றால்,  அது மாலத்தீவுக்கு நேரடி இழப்பாக அமையும். மாலத்தீவின் பொருளாதாரம் சுற்றுலாவை பெரிதும் சார்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவதால் பெரும் நஷ்டம் ஏற்படும். மாலத்தீவு சுற்றுலாவை விட லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்வது மிகவும் மலிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios