திருச்சி

திருச்சியில் தாயைப் பார்க்க நண்பர்களுடன் வந்தவரின் மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்தில் மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம், திருவானைக்கா கோயில் வெள்ளித்திருமுத்தம் களஞ்சியம் பகுதியைச் சேர்ந்த திருவரங்கம் மகன் வேலு (22). இவர் சுக்காம்பார் மணல் விற்பனை மையத்தில் மணல் அள்ளும் இயந்திர ஓட்டுநரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும் தஞ்சை மாவட்டம் கோவிலடியைச் சேர்ந்த அனுசுயா என்பவருக்கும் அண்மையில் காதல் திருமணம் நடைப்பெற்றுள்ளது. வேலு கோவிலடியிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில், வேலு தனது நண்பர்கள் திருச்சி புது செக்போஸ்ட் கன்னிமார்தோப்பு ஆறுமுகம் மகன் சங்கர் (24), புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள அன்னவாசல் - புல்வயல் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் மகன் லோகநாதன் (24) ஆகியோருடன் தனது தாயாரை பார்க்க திருச்சிக்கு வந்துள்ளார்.

நள்ளிரவு 12 மணியளவில் அனுசுயா வேலுவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, வேலு மணல் விற்பனை மையத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

அதன்பிறகு மூவரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி வந்துள்ளனர். அவர்கள் உத்தமர்சீலி மேலவெட்டி பகுதியில் வந்தபோது மின்சார கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த வேலு, சங்கர், லோகநாதன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொள்ளிடம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மூவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.