மூணாறில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 3 கல்லூரி மாணவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்த மாணவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மூணாறில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கையோடு நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை கிழக்கு கிராமத்திலுள்ள தனியார் கல்லூரியில் பயின்றுவரும் 39 மாணவர்கள் மற்றும் 3 பேராசிரியர்கள் கேரளா மாநிலத்திற்கு பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்ற நிலையில் கடந்த 19ம் தேதி அன்று மூணாறு பகுதியில் பேருந்து எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க: சுற்றுலா சென்ற இடத்தில் கல்லூரி மாணவர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்து! 3 பேர் பலி! மற்றவர்கள் நிலை என்ன?
இந்த விபத்தில் கல்குளம் வட்டம், திங்கள் நகர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி ஆர்.ஆத்திகா (20), அகஸ்தீஸ்வரம் வட்டம், கனகபுரம், அஞ்சு கிராமத்தைச் சேர்ந்த செல்வி.ஆர்.வேணிகா (20) ஆகிய இரண்டு மாணவியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், திருவரங்கனேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் செல்வன் செ.சுதன் நித்யானந்தன் (20) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இதையும் படிங்க: எம்மொழிக்கும் சளைத்ததல்ல தமிழ் மொழி! கெத்தாக தனித்து இயங்கும் ஆற்றல்கொண்டது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
இவ்விபத்தில், காயமடைந்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவன் செல்வன் கெவின் எட்மர் இட்சோன் சுரேஷ் (20) என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
