சீர்காழியில் 5–ம் வகுப்பு மாணவனுக்கு மது கொடுத்து, தீபாவளி கொண்டாடியதை செல்போனில் படம் பிடித்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி அகரதிருக்கோலக்கா தெருவைச் சேர்ந்த இளங்கோவன் மகன் அரவிந்த் (21). அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் மதுபாலன் (18), மனோகர் மகன் தினேஷ் (24).
இவர்கள் மூன்று பேரும் தீபாவளி பண்டிகையன்று அதே பகுதியில் மது குடித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள், அந்த வழியாகச் சென்ற அதே பகுதியை சேர்ந்த 5–ஆம் வகுப்பு மாணவனை வலுகட்டாயமாக அழைத்துச் சென்று, மாணவனின் வாயில் மதுவை ஊற்றினர்.
மேலும், அந்த மாணவனை மிரட்டி ஆட சொல்லி அதனை செல்போனில் படமும் பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த 3 பேரும், மதுபானம் கொடுத்தது தொடர்பாக உனது பெற்றோரிடம் தெரிவித்தால் உன்னை கொன்று விடுவோம் என்று மாணவனை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து அந்த மாணவன், தனது பெற்றோரிடம் தெரிவித்தான்.
உடனே மாணவனின் பெற்றோர், அரவிந்த், மதுபாலன், தினேஷ் ஆகியோரிடம் கேட்டனர். அப்போது அவர்கள், மாணவனின் பெற்றோருக்கும் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக மாணவனின் தந்தை சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவனுக்கு வலுகட்டாயமாக மது கொடுத்த அரவிந்த், மதுபாலன், தினேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
