விக்கிரமசிங்கபுரம்

வீட்டில் வளர்த்த ஆட்டுக் குட்டியை கொன்றதால், இறைச்சியில் விசம் வைத்து சிறுத்தைப் புலியை கொல்ல முயன்ற மூன்று பேரை கைது செய்தனர். அவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள திருப்பதியாபுரத்தைச் சேர்ந்த விவசாயி சிவனணைந்த பெருமாள் (75). அவருடைய மனைவி பார்வதி. இவர்கள் இருவரும் ஆடு, மாடுகள் வளர்க்கின்றனர்.

நேற்று முன்தினம் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மாலையில் வீட்டின் பின்பகுதியில் கட்டி வைத்திருந்தனர். இரவு நேரத்தில் வீட்டின் பின்பகுதியில் கட்டியிருந்த ஆடு, மாடுகள் திடீரென அலறியதால் விழித்த சிவனணைந்தபெருமாள் மற்றும் பார்வதி ஆகியோர் சன்னல் வழியாக பார்த்தபோது, அங்கு ஒரு சிறுத்தைப்புலி ஆடு ஒன்றை அடித்துக் கொன்றது. உடனே இருவரும் சத்தம் போட்டு அலறினர்.

அந்த சிறுத்தைப்புலி இறந்து கிடந்த ஆட்டை தூக்கிச் செல்ல முயன்றது. ஆனால் ஆடு கயிற்றில் கட்டப்பட்டு இருந்ததால் அதனை தூக்கிச் செல்ல முடியாமல் அங்கேயே போட்டுவிட்டுச் சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று காலையில் தகவலறிந்த பாபநாசம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தைப் புலியை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை கூறினர்.

இந்த நிலையில், சிவனணைந்த பெருமாள் மகன் ஆறுமுகம் (36), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராமர் (42), சுதாகரன் (39) ஆகிய மூன்று பேரும் ஆட்டைக் கொன்ற சிறுத்தைப் புலியை கொல்ல காட்டுப்பகுதிக்கு செல்லும் வழியில் விசம் கலந்த ஆட்டு இறைச்சியை போட்டுள்ளனர்.

இதுகுறித்து, தகவலறிந்த வனத்துறையினர், விசாரணை நடத்தி, மோப்பநாய் நெக்ஸ் உதவியுடன் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.

அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு செல்லும் வழியில் ஆட்டு இறைச்சியில் விசம் கலந்து போட்டு இருந்ததை மோப்பநாய் கண்டுபிடித்தது. விசம் கலந்த இறைச்சியை வனத்துறையினர் அப்புறப்படுத்தினர்.

சிறுத்தைப் புலியை கொல்ல ஆட்டு இறைச்சியில் விசம் கலந்து காட்டுப் பகுதியில் போட்டது அந்த மூன்று பேரையும் கைது செய்து வனத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். அவர்கள் தாங்கள் செய்த தவறை ஒத்துக் கொண்டதால், அவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம், ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.