சேலம்

சேலத்தில் பேருந்து நிலையத்தில் இருந்த நடத்துநரிடம் இருந்து பணப் பையை திருடிய மூவரை தனிப்படை காவலாளர்கள் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த செக்னூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (40). இவர் எடப்பாடி - மேட்டூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி இரவு, எடப்பாடி பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்து அருகில் நின்றிருந்த வெங்கடாசலத்திடம் இருந்து பணப்பையை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து எடப்பாடி காவல் நிலையத்தில் நடத்துநர் வெங்கடாசலம் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக சேலம் சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ரமேஷ் (21), ஆனந்தபாலம் அருகில் வசிக்கும் லோகநாதன் மகன் தர்ஷன் (18), சேலம் நான்கு சாலைப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ரஞ்சன் (18) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் எடப்பாடி பேருந்து நிலையத்தில் நடத்துநர் வெங்கடாசலத்திடம் இருந்து ரூ.7000 பணத்தை பையுடன் பறித்துச் சென்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பணத்தை திருடிய குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்த எடப்பாடி காவலாளர்கள் குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.