Asianet News TamilAsianet News Tamil

மத்திய, மாநில அரசுகளில் வேலை வாங்கித் தருவாதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த மூவர் கைது…

Three arrested for allegedly fraudulent Rs.1 crore claiming to work in federal and state governments
Three arrested for allegedly fraudulent Rs.1½ crore claiming to work in federal and state governments
Author
First Published Sep 13, 2017, 8:33 AM IST


கோயம்புத்தூர்

மத்திய, மாநில அரசுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த மூவரை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரி, ஒண்டிபுதூர், போத்தனூர் உள்ளிட்டப் பகுதிகளுக்கு சில நாள்களுக்கு முன்பு மர்ம ஆசாமிகள் சிலர் சென்றுள்ளனர். அவர்கள் அந்தப் பகுதி மக்களிடம் தங்களுக்கு அரசு அலுவலகங்களில் உயரதிகாரிகளை தெரியும் என்றும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அலுவலகம் மற்றும் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளும் தங்களுக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், தங்களுக்குத் தெரிந்த அரசு அதிகாரிகள் மூலம் மத்திய அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றுபவர் மூலம், குடிசைமாற்று வாரியத்தினால் கட்டப்பட்டுள்ள வீடுகளை குடியிருக்க ஒதுக்கீடு பெற்றுத் தருவதாகவும் கூறி ஆசை வார்த்தை மூலம் வலைவீசியுள்ளனர்.

அரசு உயர் அதிகாரி என்று கூறி ஒருவரையும் மக்களுக்கு அறிமுகம் செய்து இவர்களின் வலையில் விழச் செய்துள்ளனர்.

இவை அனைத்தையும் உண்மை என்று நம்பி மக்கள், மத்திய அரசு அலுவலகங்களில் வேலை பெறுவதற்காக ரூ.5 இலட்சம் வரையும், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இலவச வீடு கிடைக்க ரூ.50 ஆயிரம் வரையும் அந்த நபர்களிடம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

மேலும், வேலைக்கான ஆணைகள், வீடு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளையும் அந்த நபர்கள் வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு கொண்டு சென்றபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்துள்ளனர்.

அந்த மர்ம ஆசாமிகள் 100–க்கும் மேற்பட்டவர்களிடம் மொத்தம் ரூ.1½ கோடி வரை வசூலித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இந்த மோசடி தொடர்பாக கோவை நகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தனர். ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஆசை தம்பி, ஆய்வாளர் கலையரசி மற்றும் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மோசடி கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டவர் கோவை இரயில் நிலையம் அருகே வந்தபோது, பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அவரைப் பார்த்து மடக்கிப் பிடித்தனர்.

ஆனால், மக்களின் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மத்திய குற்றப்பிரிவு காவலாளர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மோசடி கும்பலைச் சேர்ந்த மூவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரின் விவரம்

1.. சங்கர்ராஜா (35), பராசக்தி நகர், ஈச்சனாரி, கோவை.

2.. மகபூப் அலி (39), கே.வி.கே. நகர், மதுக்கரை மெயின்ரோடு, கோவை.

3.. சுதாகர் (37), காமராஜர் நகர், சிட்கோ, கோவை.

இந்த மோசடிக்கு சங்கர் ராஜா தலைவனாக செயல்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் என்று அவர் பலரிடம் கூறி வந்துள்ளார். அதிகாரியின் பெயரும், இவரது பெயரும் ஒன்றுபோல் இருந்ததால் பலர் இதனை நம்பி பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். மகபூப் அலியும், சுதாகரும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

கோவை ஈச்சனாரியில் உள்ள சங்கர் ராஜாவின் வீட்டில் சோதனை நடத்தி ஏராளமான போலி முத்திரைகள், வேலை வாய்ப்பு வழங்கியதற்கான போலி அனுமதி ஆணைகள், வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதுபோல் உத்தரவிடப்பட்ட போலி ஆவணங்களை காவல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரி மற்றும் மாநில அரசு அதிகாரி பெயரிலான போலி முத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான சங்கர் ராஜா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர். ஜாமீனில் வெளியே வந்தவர் மீண்டும் மோசடியில் ஈடுபட்டு கைதாகி உள்ளார்.

மோசடி செய்த பணத்தில் வாங்கி குவித்த 3 சொகுசு கார்கள், ரூ.2 இலட்சம் மதிப்புள்ள உயர் ரக மோட்டார் சைக்கிள் உள்பட ஒன்பது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.35 இலட்சம் ஆகும்.

மோசடி கும்பல் மீது ஆள்மாறாட்டம், மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இவர்களை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி போலீசார் நேற்று இரவு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios