தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று முதல் தனது பிரசாரத்தைத் தொடங்கும் நிலையில் திருச்சியில் குவிந்துள்ள தொண்டர் படை தமிழக அரசியல் கட்சி தலைவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரம் இன்று திருச்சியில் தொடங்குகிறது. பல்வேறுகட்ட சட்டப்போராட்டங்களைக் கடந்து விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி பெறப்பட்டது. திருச்சி மரக்கடைப் பகுதியில் காலை 10.30 மணிக்கு விஜய் தனது பிரசாரத்தைத் தொடங்குவார் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. திட்டமிட்டபடி விஜய் காலை 10 மணியளவில் திருச்சி விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்து சேர்ந்தார்.

திருச்சி விமான நிலையம் முதல் மரக்கடை இடையேயான தொலைவு வெறும் 7 கிமீ தான் என்று சொல்லப்படுகிறது. இந்த 7 கிமீ முழுவதும் தவெக தொண்டர்கள் குவிந்திருந்து தங்கள் தலைவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். விஜய் ரோட் ஷோ நடத்தினால் திருச்சியில் மிகப்பெரிய போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி விஜய் பிரசார வாகனத்தை விட்டு வெளியே வரக்கூடாது, தலையை கூட வெளியில் நீட்டக்கூடாது என்று காவல் துறை தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால் காவல்துறையினரின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கும் வகையில் தவெக தொண்டர்கள் தங்கள் தலைவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்துள்ளனர். அதன்படி தொண்டர்கள் வெள்ளத்தில் சிக்கய விஜய்யின் பிரசார வாகனம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி மரக்கடை பகுதியை வந்துசேர 5.30 மணி நேரத்தையும் தாண்டியுள்ளது.

விஜய்யின் பேச்சைக் கேட்பதற்காக குவிந்துள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய்யின் பிரசாரத்திற்காக குவிந்துள்ள கூட்டத்தைப் பார்த்து தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக., அதிமுக என பல கட்சி தலைவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.