44th Chess Olympiad Video: பிரதமர் மோடியை விமர்சித்தவர்கள் இன்று மவுனம் ஏன்?
சென்னையில் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வெளியாகி இருக்கும் தமிழ்நாடு அரசின் வீடியோவில் ஏன் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா புகைப்படங்கள் இடம் பெறவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னையில் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செஸ் போட்டியை இந்தியப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பிரதமரை நேரில் அழைப்பதற்காக வரும் 19ஆம் தேதி திமுக எம்பிக்கள் நேரில் சென்று அழைப்பு விடுக்கின்றனர்.
முன்பு தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பதாக கூறப்பட்டு இருந்தது. ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், எம்பிக்கள் செல்ல தீர்மானித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக முக ஸ்டாலின் உடல்நிலை குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடி நேற்று கேட்டு அறிந்தார். அப்போது, ஒலிம்பிக் போட்டியை திறந்து வைப்பதற்கு வருமாறு முக ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். எம்பிக்கள் நேரில் வந்து அழைப்பு விடுப்பார்கள் என்று தெரிவித்து இருந்தார்.
பிரதமர் மோடியை அழைப்பதற்கு எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழக செயலாளர் இறையன்பு ஆகியோர் வரும் 19ஆம் தேதி செல்லி செல்கின்றனர்.
செஸ் விளையாட்டு மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. துவக்க விழாவை பிரம்மாண்ட முறையில் சென்னையில் இருக்கும் நேரு விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதில், 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம், நாற்பது நாட்களில் 26 மாநிலங்களில் உள்ள 75 நகரங்களுக்கு சென்று இறுதியாக மாமல்லபுரம் வந்தடைகிறது. செஸ் போட்டி துவக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. 27ஆம் தேதி புதுச்சேரி வரும் பிரதமர் மோடி, மறுநாள் செஸ் போட்டியை துவக்கி வைக்கிறார்.
இந்த நிலையில் நேற்று செஸ் ஒலிம்பிக் தொடர்பான பாடல் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. நடிகர் ரஜினிகாந்த இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தாரா. ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைத்து இருந்தார். அதில், முதல்வர் முக ஸ்டாலின் கும்பிட்டவாறு நடந்து வருவது போன்றும், சுற்றியும் பெண்கள் நின்று நடனம் ஆடுவதும் போலவும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
ரஹ்மானும் அந்த வீடியோவில் தோன்றுகிறார். ஆனால், வீடியோவில் தேசியக் கொடி இடம் பெறவில்லை. உலக செஸ் சேம்பியனாக வலம் வந்த விஸ்வநாதன் ஆனந்த்தின் பெயரும் இடம் பெறவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் விஸ்வநாத் ஆனந்த். அதேபோல் பிரக்ஞானந்தாவின் புகைப்படமும் இடம் பெறவில்லை. ஏன் அவர்களது புகைப்படங்கள் இடம் பெறவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை வெளியிட்ட ரஜினிகாந்த்..!!
மேலும், தமிழக அரசின் விளம்பர வீடியோ போன்றும், கமர்ஷியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்டது போன்று இருக்கிறது. கொரோனா தடுப்பு ஊசி தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடி புகைப்படம் இடம் பெற்று இருந்தது. அப்போது, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் ஏன், தற்போது வாய் மூடி மவுனமாக இருக்கின்றனர் என்ற கேள்வியையும் சமூக ஊடகங்களில் எழுப்பியுள்ளனர்.