தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாள் முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், போலீஸ் தடியடியில் படுகாயம் அடைந்து கோமா நிலையில் இருந்த ஜஸ்டின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த போராட்டத்தின் 100-வது நாளாக மே மாதம் 22-ந்தேதி மக்கள் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக வன்முறையாக மாறியது. 

இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியால் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்த ஷிப்பிங் கம்பெனி டிரைவர் ஜஸ்டின் மீது போலீஸ் நடத்திய தடியடியில், படுகாயமடைந்தார். இதனால் அவர் கோமா நிலையில் இருந்து வந்தார். 

இந்நிலையில் அரசு மருத்துவமனையிலிருந்த தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று இரவு பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட்  மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த ஜஸ்டின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தூத்துக்குடி கலவரத்தில் உயிரிந்தோர் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.