தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் நடைப்பெற்ற நிலையில், மத்திய அரசின் சார்பில் நிலத்தடி நீர் தொடர்பாக ஆய்வு ஏதும் நடத்தப்பட்டதா என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய நீர்வள ஆதாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் அளித்துள்ளார்

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைப் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என மத்திய அரசு குறிப்பிட்டு உள்ளது.

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அங்குள்ள மக்கள் போர்க்கொடி தூக்கினர். அதற்காக தொடர்ந்து 100 நாள் போராட்டம் நடத்தினர். நூறாவது நாளில் அங்கு வன்முறை வெடித்ததால் அங்கு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் உயிர் இழந்தனர்.

இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் கேள்விக்கு மத்திய நீர்வள ஆதாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் அளித்துள்ள பதிலில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் மத்திய அரசின் நிலத்தடி நீர் வாரியம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

பெரும்பாலான நீர் மாதிரிகளில் காரீயம், காட்மியம், குரோமியம், இரும்பு, மேங்கனீஸ் மற்றும் ஆர்சனிக் ஆகிய உலோகங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு இருப்பதாகவும், ஸ்டெர்லைட் ஆலைப் பகுதியில் மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட சோதனையில், புளோரைடு உள்ளிட்ட தாதுக்கள் அதிக அளவில் இருந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

நீர்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தொழிற்சாலை மாசுகளை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்தி வருவதாகவும், சுற்றுச்சூழல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத ஸ்டெர்லைட் ஆலை மே 23 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது  என்றும் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் தெரிவித்து உள்ளார்.